களக்காடு ஐக்கிய முஸ்லீம் ஆண்டு விழா இந்திய பொருளாதாரம். குடி அரசு - சொற்பொழிவு - 18.01.1931 

Rate this item
(0 votes)

தலைவர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே! 

இன்று நான் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டேன். ஆனாலும் மிக்க களைப்போடு வந்திருக்கிறேன். சரியாக 24 மணி நேரம் ரயிலில் பிரயாணம் செய்துவிட்டு 10, 15 மைல் மோட்டாரிலும் வந்திருக் கிறேன். ஆனதால் இன்றைய விசயத்தைப் பற்றி நான் சரி வரப் பேச முடியா தென்றே கருதுகிறேன். அன்றியும் அதிக நேரமும் பேசமுடியா தென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். 

நிகழ்ச்சிக் குறிப்பில் எனக்கு இன்று குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயம் *இந்திய பொருளாதாரம்” என்பதாகும். இது என்னைக் கேட்டுப் போட்ட தல்ல என்றாலும் எந்தத் தலைப்பினாலும் என்னுடைய சங்கதி ஏதோ அதைத் தான் சொல்லுவது என் குணம் என்பது நீங்களும் தலைவரும் அறிந்ததே யாகும். ஆனாலும் பொருளாதாரம் என்னும் தலைப்பும் மிக்க நல்ல தலைப்பேயாகும். இதன் மூலம் எனது சங்கதியை சொல்ல முடியா விட்டால் பின் எதின் மூலம் நான் சொல்லக்கூடும்? ஆனால் எனக்கிருக்கும் கஷ்ட மெல்லாம் அதிக நேரம் பேச முடியாதென்பதேயாகும். ஆதலால் மன்னிக்கக் கோருகின்றேன் 

சகோதரர்களே பொருளாதாரம் என்கின்ற வார்த்தை நம் நாட்டில் தற்காலம் உள்ளதுபோல் முன் காலத்தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. முன் காலத்தில் எல்லாம் பொருளை உடைத்தாயிருக்கவும் பணம் காசாய் கையாளவும் சிலருக்கே உரிமை இருந்தது. மற்றவர்களுக்கு தானியம் தவிர வேறு ஒன்றும் பெற உரிமை கிடையாது. நாட்டு வழக்கிலும் பணம் காசு புழக்கமும் கிடையாது. எல்லா வாழ்க்கையும் பண்ட மாற்றை அடிப்படை யாகக் கொண்டதாகவே இருக்கும். ஒரு பண்டத்தைக் கொடுத்து மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்ளுவார்கள். கைத்தொழில்காரர்கள், கூலியாள் கள், ஏவலாள்கள் எல்லோருக்கும் தானியமே கொடுப்பது வழக்கம். மந்திரி களுக்கும் அரசன் பூமி மானியம் விடுவதே தவிர பணமாக ஏதும் கொடுப் பதில்லை. எனக்குத் தெரிய 40, 50 வருஷங்களுக்கு முன் வேஷ்டி கொடுப்பவன், உலோகப்பாத்திரம் கொடுப்பவன், நகை செய்து கொடுப்பவன், தோட்டங்களுக்கு கலப்பை, ஏர் செய்து கொடுப்பவன், செருப்பு தைத்துக் கொடுப்பவன். சுவர் எவப்பவன் முதலியவர்கள் எல்லோரும் தானியம்தான் வாங்கிக் கொள்ளுவார்கள் சில ஆட்களுக்கு வருஷத்திற்கு இவ்வளவு என்று இருக்கும். 

பெருத்த மிறாசுதாரர்களிடம் பார்த்தாலும் தானியத்தை தான் பூமியில் பெரிய பெரிய குழிகள் ஆழமாக வெட்டிப்போட்டு அவத்திருப்பார்கள். பண்டமாற்றைத் தவிர சாதாரண ஜனங்கள் பணமாய் பார்ப்பது மிக்க அபூர்வமாகவே இருக்கும். பெருத்த மிறாசுதாரர்களிடமும் அரசாங்கப் பழக்கம் முதலியவைகளிலும் பணம் புழங்கினதானாலும் அதுவும் மிகச்சிறு நாணையமாகத்தான் இருக்கும். ரூபாய் என்கிற பெயர் கூட இந்த நாட்டு பாஷையல்ல, நாணையமும் அல்ல, சின்னப்பணம் அதாவது ரூ.1க்கு 10 கொண்டதாக இருக்கும். விலை பேசுவதிலும் எத்தனை பணம் என்றுதான் கேட்டார்கள், செல்வமுள்ளவனையும், பணக்காரன் என்றுதான் சொல்லுகின்ற வழக்கம் இன்னும் உண்டு அரசியல் அபராதம் முதலியவை களிலும் 100 பணம் 200 பணம் 500 பணம் என்று பணக்கணக்கில்தான் கணக்கு சொல்லு வதாகும். சமீபகாலம்வரை கூட மலையாளத்தில், திருவாங்கூர், கொச்சி ராஜ்ஜியத்தில் சிவில் கோர்ட்டில் ரூபா என்று பிராது போடுவதில்லை. 10 ஆயிரம் ரூடாயிக்கு பிராது போடுவதானாலும் அதைப் பணமாகப் பெருக்கி அந்தப்பண எண்ணிக்கையைக் காட்டிதான் பிராது போடும் வழக்கம் இருந்து வந்தது. சில இடத்தில் இன்றும் இருக்கிறது. 

ஆகவே ரூபாய் என்பதும் பவுன் என்பதும் வெளிநாட்டு நாணை யங்கள். அவை நம் நாட்டிலே புழங்கக்கூடிய நிலை ஏற்பட்டதே பொருளா தார நிலையில் நம்நாடு முன்னையைவிட சற்று உயர்வடைந்தது என்பதைக் காட்ட அறிகுறியாகும். எனவே பொதுவாகப் பார்த்தால் பொருளாதாரம் நம் நாட்டில் குறைவு என்று நான் சொல்லமாட்டேன், மற்ற நாட்டைவிட இந்தநாடு பொருளாதாரத்தில் குறைந்ததல்ல. இந்தியாவை நம்பி அனேக நாடுகள் தங்கள் வாழ்வை நிச்சயித்துக் கொண்டிருக்கின்றன. 

இந்தியாவின் பொருளாதாரத்தில் நாட்டமில்லையானால் வெள்ளாக் காரனுக்கு இங்கு வேலை இல்லை. இதுபோலவே இதற்கு முன் வெளி நாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு வந்த அரசர்களுக்கும் அவர்களுக்கும் முன் வந்த ஆரியர்களுக்கும் இந்த நாட்டில் வேலையே இல்லை. 

ஆகவே இவ்வளவு உயர்ந்த பொருளாதார நிலையுடைய இந்திய நாடு இந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையான பேர்களை வயிரார உண்ணவும். இடுப்பார உடுக்கவும், மானமோடு பிழைக்கவும் முடியாதபடி வேறுபல காரியங்கள் கொடுமைப்படுத்துகின்றன. அவைகளில் முக்கிய மானவை மதமும். கடவுளும், அடுத்த ஜென்மமுமேயாகும். 

மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும் மனிதனுக்கு எவ்வளவு கிடைத் தாலும், எவ்வளவு விளைந்தாலும் அனேகமாய் எல்லாவற்றையும் மேல் கண்ட மூன்றுமே அபகரித்துக் கொள்ளுகின்றன. அதிலும் உலகத்தில் வேறு எப்பாகத்திலும் காணமுடியாத மாதிரி இந்த நாட்டில் இம்மூன்றினாலும் பிழைப்பதற்கென்றே பிரவியை ஆதாரமாகக் கொண்டு சில வகுப்புகள் ஏற்பட்டு அந்த நிலைகளைக் காப்பாற்றிக்கொண்டு பாடுபடாமல் வயிறு வளர்ப்பதோடு சகல போக்கியங்களையும் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டதால் இந்த உலகம் உள்ளவரை இந்தியாவின் பொருளாதாரம் இப்படியே இருக்கும்படியாக ஏற்பட்டு விட்டது. அதுமாத்திரமல்லாமல் இந்தநாட்டில் அரசனுக்கும் குடிகளுக்கும் இருக்கும் முறையும், முதலாளிக் கும். தொழிலாளிக்கும் இருக்கும் முறையும், மிறாசுதாரனுக்கும் குடியான வனுக்கும் இருக்கும் முறையும், படித்தவனுக்கும் படிக்காதவ னுக்கும் இருக் கும் முறையும் மேல்ஜாதிக்காரனுக்கும் கீழ்ஜாதிக்காரனுக்கும் இருக்கும் முறையும் பார்த்தால் இந்த நாட்டு மக்களில் 100க்கு 90 பேர்களுடைய பொரு வாதார நிலை இன்றைய நிலையைவிட கடுகளவுகூட மாறி முன்னேற்ற மடைய முடியவே முடியாது என்பது எனது உறுதி. ஆகவே இம்முறைகளும் முன் சொல்லப்பட்ட மதம். கடவுள், அடுத்த ஜன்மம் ஆகிய கொள்கைகளும் இந்தியா எவ்வளவு வளம்பொருந்திய நாடானாலும் செல்வம் பொருந்திய தானாலும், பொன் விளையும், புண்ணிய" பூமியானாலும் தபோதனர்கள், அவதாரங்கள், ஆழ்வார்கள். நாயன்மார்கள், முனிகள், ரிஷிகள், மகாத்மாக் கள் பிறந்த நாடானாலும், பஞ்சநதி, அஷ்ட நதி ஜீவநதியாய் ஓடுகின்ற நாடானாலும் தரித்திரமும், கூலியும், இழிவும், பஞ்சமும், நோயும் இந்தியா வுக்கு நிரந்தர சொந்தமானதேயாகும் என்பதை கவனத்தில் வையுங்கள். 

நம்முடைய பொருளாதாரக் கஷ்டமெல்லாம் முதலாவது. அநாவ சியமான செலவுகளும், அவற்றிற்கும் அதிகச் செலவுகளுமாகும். இந்திய மக்களின் நூறுக்கு 90 பேர்களுடைய சம்பாதனைகள் அனாவசியமான வைகளுக்கும், குருட்டுப்பழக்கம், மூடநம்பிக்கையானவைகளுக்கும், சோம் பேறியாய் வாழ்கின்றவர்களின் சுகபோகத்திற்கும் செலவு செய்யப்படுவ தினாலேயே வினாய் விடுகின்றன. 

இரண்டாவது சுலபத்தில் ஒரே பக்கமாக பொருள்களெல்லாம் போய் சேரும்படியாகியும் விடுகின்றன. 

மூன்றாவதாக, மனிதனுக்கு உள்ள நேரமும், சக்தியும் குறைந்த வரும்படிக்கே செலவாகும்படியான முறைகளே இங்கு வெகுகாலமாய் இருந்துவருகின்றன அதாவது புத்தியை செலவழித்து குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகள் நடைபெறவும், அதனால் அதிக சம்பாதனை அடையும் மார்க்கம் தேடவுமான துறையானது அடியோடு அடைபட்டுப் போய்விட்டது. இத்தியாதி காரணங்களே இந்தியாவின் பொருளாதாரத்தின் குறைவிற்குக் காரணமாகும். 

சாமி பூசை, உற்சவம், புண்ணியம், யாத்திரை ஆகியவைகளின் பொபரால் தனித்தனிச் செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும் கணக்குப் பார்த்தால் மனிதனின் மொத்த வரும்படியில் ஒரு குறிப்பிட்ட பாகம் வீணாவதைக் காணலாம். 

பிறகு மதத்தைக் காரணமாய் வைத்து ஏற்பாடுகள் செய்திருக்கும் சடங்குகளையும் அவற்றிற்காகும் செலவுகளையும் கணக்குப் பார்த்தால் அதுவும் ஒரு குறிப்பிட்ட பாகத்தைக் கவர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

மற்றும் மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்கும் போதே பெரும் பான்மையோர் அவர்களது கல்வி, கல்யாணம் முதலியவைகளால் ஏற்பட்ட கடனின் பேரிலேயே வாழ்க்கையைத்தொடங்க வேண்டியிருக்கின்றன. இவைகள் எல்லாம் சேர்ந்து அவசியமான காரியங்களுக்கு பொருள் இல்லா மல் கஷ்டப்படும்படி செய்து விடுவதுடன் சதா தரித்திரர்களாகவும் கடன்காரர் களாகவும் இருக்கவேண்டியதாய் இருக்கின்றது. 

இவை மாத்திரமல்லாமல் நாட்டின் பொருளாதார நிலையை விர்த்தி செய்ய அவசியமான பொதுத் தொழில் சாலைகள், யந்திர சாலைகள் முதவியவைகள் ஏற்பாடு செய்வதற்கும் மார்க்கமில்லாமல் பொருள்களை எல்லாம் மேல்கண்ட சடங்குகளும், வாழ்க்கை முறைகளும் கவர்ந்து கொள்வ தோடு கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவைகள் செய்து வைத்தல், மற்றும் உற்சவம், பூசை ஆகியவைகளுக்குப் பண்டு, பூமிகள் முதலிய சொத்துக்கள் ஒதுக்கிவைத்தல் ஆகிய காரியங்கள் பெரும், பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்ளுகின்றன. 

ஆகவே இந்த மாதிரியாக எல்லாம் எல்லாப்பொருள்களும் நாச மாகிக்கொண்டும், வீணாகிக்கொண்டும் இருக்கையில் இந்த நாடு எந்தக் காலத்தில்தான் = எந்த வகையில்தான் பொருளாதாரத்தில் சீர் அடைய முடியும்? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். நம் நாட்டுப் பொரு வாதாரக் கஷ்டத்திற்கு மற்றொரு காரணத்தையும் சற்று கவனித்துப் பாருங் கள். நம்முடைய வாழ்க்கைத்தன்மையை மேல் நாடுகளைப் பார்த்து நாளுக்கு நாள் செலவை அதிகரித்துக் கொண்டு வருகின்றோம். போக போக்கியங் களை அதிகப்படுத்திக் கொள்ளுகின்றோம். முன்னையைவிட அதாவது 30, 40, 50 வருஷங்களுக்கு முன் நாம் இருந்ததைவிட அதிகமான ஆடம்பரங் களை விரும்புகின்றோம். மேல்நாட்டு நடை உடை பாவனையைக் கண்டு காட்பியடித்துப் படிப்படியாக உயருகின்றோம். இவையெல் லாம் நமக்குத் தகாதென்றோ, குற்றமென்றோ சொல்ல வரவில்லை. ஆனால் மேல்நாட்டார் எப்படித் தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டே தனது வாழ் வின் சுகபோகத்தையும் உயர்த்திக்கொண்டுபோகின் றாரோ அதுபோலவே நாமும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டும் வாழ்க்கைத் தன்மை யின் அவசியத்திற் கேற்ற வருவாய்க்கு வகை செய்துகொண்டும்தானே அதில் பிரவேசிக்கவேண்டும். அதுவுமில்லாமல், இதுவுமில்லாமல் வெறும் மனப்பால் குடிப்பதில் என்ன பயன் அடையக் கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். மேல் நாட்டான் குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து நம்மைப் பார்க்கிலும் பன்மடங்கு லாபம் அடை கிறான். அதனால் அவர்கள் சுகமனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 அணா, மேல் நாட்டானுக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 ரூபாய், இதற்குக் காரணம் அவன் வேலை துரிதமே ஒழிய வேலை சாமார்த்தியம் அல்ல என ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் 10 மணி நேரம் செய்யும் வேலையை மேல் நாட்டான் ஒரு மணி நேரத்தில் செய்துவிடுகிறான, அதற்கேற்ற சாதனங்களை அவன் கையாடுகிறான். அதற் காகவே மேல்நாட்டுச் செல்வத்தையும், அறிவையும், ஊக்கத்தையும் செலவு செய்து அந்த நிலை அடைந்திருக்கின்றான். அப்படிப் பட்டவனைப் பார்த்து வேலை செய்வதிலும், சம்பாதிப்பதிலும் காப்பி அடிக்காமல் அதாவது, அதுபோல் நடக்காமல் அவன் அனுபவிப்பதில் மாத்திரம் காப்பி அடித்து அவனைப்போல் நடக்க ஆரம்பித்தால் சாத்தியப்படுமா?- பொருளாதாரம் இடம் கொடுக்குமா? என்று யோசித்துப்பாருங்கள். 

நமது நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் செத்துப்போன கைத் தொழில் களை உயிர்ப்பிக்க வேண்டும் என்கின்றார்கள். உதாரணமாக இராட்டினத்தில் நூல் நூற்கவேண்டும், கைத்தரியால் வேஷ்டி நெய்ய வேண்டும் என்கின்றார் கள், போராக்குறைக்கு தக்கிளியில் நூல் நூற்பது தேசியப் பொருளாதார பக்தியாக குழந்தைகளும் நாமும் கற்பிக்கப்படு கிறோம். ஒரு நாளைக்கு ஒரு பெண் ராட்டினத்தில் நூல் நூற்றால் கால் ராத்தல் அல்லது காவேவீசம் ராத்தல் நூற்று 1 அணா அல்லது அதிகமானாலும் 0-1-6 அணா கூலிதான் அடையக் கூடும். அதுவும் வெகு மோசமான சரக்கைதான் உற்பத்தி செய்யக்கூடும். மேல்நாட்டானோ ஒரு ஆள் ஒரு நாளையில் இதைவிட குறைந்த நேரத்தில் இதைவிடக் குறைந்த கஷ்டத்தில் இதைவிட உயர்ந்த சரக்காக 5 றாத்தல் நாத்தால் நூற்று தினம் 2 ரூபாய் சம்பாதிக்கிறான். ஆகவே மேல் நாட்டார் தினம் 2 ரூ.சம்பாத்தியத் திற்கும் நம் நாட்டான் தினம் 2 அணா சம்பாதிக்கவும் இதுவும், மற்றும் இதுபோலவே விவசாயத்துரையிலும், வியாபாரத் துரையிலு முள்ள காரணங் களாகுமே யல்லாமல் வேறு ஒரு காரணமுமல்ல. சமூக சீர் திருத்த சம்மந்தமான விஷயங்களுக்கு நமது பண்டிதர்கள் எப்படி தொல் காப்பியர் காலத்திற்குப் போய் ஆராய்ச்சி செய்து அந்த கால நாகரிகத்தைக் கொண்டு சமூக முன்னேற்றம் செய்யப் பார்க்கின்றார்களோ அது போலவே நமது தேசியப் பொருளாதாரப் பண்டிதர்கள், அதைவிட முந்திய காலத்திய கைத் தொழில்களைக் கண்டுபிடித்து அந்தத் துறையில் பொருளாதாரத்தை முன்னுக்குக் கொண்டுவரப் பார்க்கின்றார்கள் தலைவர்களுமே காரணமல்லாமல் வேறு ஒன்றும் முக்கிய காரணமல்ல என்பது எனதபிப்பிராயம். 

சகோதரர்களே! வருஷம் ஒன்றுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் மதம், கடவுள், சடங்கு ஆகியவைகளுக்கு செலவாவதை மறுக்கின்றீர்களா? பல கோடிக்கணக்கான ரூபாய்கள் சாமி, கோயில், பூசை. உற்சவம், நகை, வாகனம் ஆகியவைகளுக்காக அடங்கி, முடங்கிக்கிடக்கின்றதை நீங்கள் மறுக்கின்றீர்களா? எனவே இந்தத் துகைகள் எல்லாம் புதிய முறை ஆராய்ச்சி முறை மேல் நாட்டு முறை ஆகியவைகளில் கைத்தொழிலும், வியாபாரமும், விவசாயமும் செய்யப்பட்டு குருட்டுப்பழக்கம் மூட நம்பிக்கை சுயநவக்காரர் கள் சூழ்ச்சி ஆகியவைகளில் இருந்து மீண்டு விட்டோமானால் நமது பொரு ளாதார நிலை தானாகவே உயருமா? இல்லையா? என்பதையும், அந்தப்படி செய்யாத காரணமே இன்றைய தரித்திர நிலைக்குக் காரணமா? இல்லையா? என்பதையும் நீங்களே யோசித்துப்பாருங்கள். எனவே எனக்குக் கொடுத்த விஷயத்தின் தலைப்பில் எனக்குத் தோன்றியதைத் தங்களுக்கு எடுத்துச் சொன்னேன் இது சரியா? தப்பா? என்று யோசித்துப் பார்த்து உங்கள் மன திற்குச் சரி என்று தோன்றியதை வைத்துக்கொண்டு மற்றதை உடனே மறந்து விடும்படியாய் கேட்டுக்கொண்டு இவ்விஷயத்தை முடிக்கிறேன். 

குறிப்பு:27.2.1930 இல் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஐக்கிய முஸ்லிம் சங்கத்தின் இரண்டாம் ஆண்டுவிழா.

குடி அரசு - சொற்பொழிவு - 18.01.1931

Read 32 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.